ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா!!
கர்நாடக ஆளுநரை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இவர்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.
சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லி சென்றனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினர்.
இதனால் யார் அடுத்த முதல்வர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று அறிவிக்கப்பட்டார். அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.
இதையடுத்து, பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சித்தராமையா சந்தித்து பெரும்பான்மைக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
நெவ்ஸ்டம்.in