அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின் வழங்கும் மிஷின்கள் நிறுவப்படும்..!
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு வலி ஒரு பக்கமும், எரிச்சல் மறு பக்கமும் சேர்ந்து பாடாய் படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கறை பட்டு விடுமோ என்கிற பயமும் பெண்களுக்கு இந்த சமயத்தில் ஏற்படுவது இயல்பு.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைக்கக்கூடாது, பூஜை அறைக்கு செல்லக்கூடாது, வீடுகளில் புழங்கக்கூடாது என ஏற்கனவே உடல் ரீதியில் நொந்துகிடக்கும் பெண்களை மனரீதியாகவும் நோகடிப்பதை பார்த்திருப்போம். அதேபோல, அவர்களுக்கு தேவையான வசதியையும் பெரும்பாலான வீடுகளில் செய்து தருவது கிடையாது.
குறிப்பாக, கிராமப்புறங்களிலும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மாதவிடாய் காலத்தில் ஏதேனும் ஒரு அழுக்கு துணியைதான் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் கேடு விளைவிக்கும் விஷயம் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் கடைகளுக்கு சென்று நாப்கின் வாங்கக் கூட கூச்சப்படும் பெண்கள் இன்றைக்கும் இருக்கவே செய்கிறார்கள்.
இந்த அனைத்து விஷயங்களையும் கருத்தில்கொண்டுதான் கேரள அரசு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைக்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களை நம்பிக்கை மிக்கவர்களாக மாற்றவுமே இந்த திட்டத்தை கேரள அரசு முன்னெடுத்துள்ளது" என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.