கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி..!!
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்தது. கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு உறுதி அளித்தேன்.
சிறையில் என்னை சந்திக்க சோனியா காந்தி வந்ததை என்னால் மறக்க முடியாது. அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம். சித்தராமையா உட்பட எனது மாநிலத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.