கர்நாடக தேர்தலில் புதிய நடைமுறை அறிமுகம்..!! "செல்பி எடு.. ஓட்டுப்போடு"..!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்க இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்த சட்டப்பேரவை தேர்தலில், பெங்களூருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளரின் முகத்தை அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, பெங்களூருவில் அரண்மனை சாலையில் அமைந்துள்ள ராம்நாராயண் செல்லாராம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் அறை எண் இரண்டடில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், தங்களது செல்லிடைபேசியில் தேர்தல் ஆணையத்தின் சுனாவ்னா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்ணை, செல்லிடைபேசி எண்ணை பதிவிட்டு, ஒடிபியை உள்ளீட வேண்டும். இந்த செயலியில், வாக்காளர் தனது செல்ஃபியை எடுத்து பதிவேற்ற வேண்டும். பிறகு வாக்காளர் வாக்குச்சாவடியை அடைந்ததும், அங்கிருக்கும் முகத்தை அடையாளம் காணும் கருவி மூலம் வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப்படும். அவர் அளித்த செல்ஃபியுடன், தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புகைப்படம் ஒத்துப்போனால், அந்த வாக்காளர் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கலாம்.
இந்த வசதி மூலம், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கள்ள ஓட்டுப் போடுவது, மோசடி செய்வது என்பது இருக்காது என்றும் தேர்தல் அதிகாரிகள் கருதுகிறார்கள்.