ஓபிஎஸ் - டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்ததால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதென்ன ?
சென்னை அடையாறில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். தர்ம யுத்தம் தொடங்கியதே டிடிவி தினகரனுக்கு எதிராக தான் என்றெல்லாம் சொல்லி விட்டு தற்போது அவரை சந்தித்துள்ளார். எந்த சுழ்நிலையிலும் அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு மன்னிப்பே கிடையாது. சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம் தற்போது சின்னம்மா என்று கூறுகிறார். ஓ.பன்னீர் செல்வத்துடன் உள்ள மற்றவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும். டிடிவி தினகரன் சொல்வதையெல்லாம் நகைச்சுவையாக தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.