சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து மே 7 ஆம் தேதியோடு 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. மூன்றாம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்துவைக்கிறது. இதனையடுத்து மே 7, 8, 9 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “ஈடில்லா, ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” எனும் மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபேற்ற “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில் உரையாற்றிய தலைமைச்செயலாளர் இறையன்பு, “அரசு நிர்வாகம், விழாக்களை நடத்துவது, அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்குதான். விளிம்பு நிலையில் இருப்பவர்களின் காயங்களுக்கு மருந்து தடவுவதே சிறந்த நிர்வாகம்” என்றார்.