“பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார்!!”
ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக தலைவர் போல் செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது, ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் என்று ஆளுநர் ரவி பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஆளுநருக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார்.
சனாதன வகுப்பு எடுக்கிறார், ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார். மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார். தான் மேற்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களைச் சொல்லி வருகிறார்.
இப்படி ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று குற்றம்சாட்டியுள்ளார். கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.
ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. அந்தப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் காட்ட முனையக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
newstm.in