சிஎஸ்கே – லக்னோ போட்டியில் வெற்றி பெற்ற மழை!!
சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ இடையே 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா, கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் சென்னை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
மேயர்ஸ் 14 ரன், மனன் வோரா 10 ரன், கரன் சர்மா 9 ரன், கேப்டன் குருனல் பாண்ட்யா 0 ரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். எனவே லக்னோ அணி 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து நிகோலஸ் பூரனும், ஆயுஷ் பதோனியும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 59 ரன்கள் சேர்த்த நிலையில் பூரன் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அதிரடியில் மிரட்டிய பதோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
newstm.in