இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை திடீரென நிறுத்திய போலீஸ்..!!
சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
மாலை முதல் நடந்து வந்த இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இரவு 10 மணியை நெருங்கியதும் ஏ.ஆர்.ரஹ்மான் ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சைய்ய சைய்யா’ பாடலை பாடத் தொடங்கிய போது போலீஸ்காரர் ஒருவர் மேடையின் மீது ஏறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்தார். சில இசைக் கலைஞர்கள் சிலர் அதனை கவனிக்காமல் இசைத்துக் கொண்டிருக்கவே, அவர்கள் அருகில் சென்ற அவர் உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார்.
இதனைக் கண்ட அங்கிருந்த ரசிகர்கள், கூச்சலிட்டனர். பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தினிடையே சலசலப்பு நிலவியது.