அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஸ்டோரி : தளபதியுடன் இணைந்த அஜித்..!!
ஒருவருக்கு சுய பலம், மற்றவருக்கு பின் புலம் என திரைக்களத்தில் சம போட்டியாளராக இருக்கும் தல-தளபதி இருவருமே பல கோணங்களில் மாறுபட்டு தெரிகிறார்கள். அஜித்தை ஒரு விதத்தில் ஆத்மார்த்தமாக அரவணைத்துக் கொள்ளும் ரசிகர்கள், விஜய்யை வேறொரு விதத்தில் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
தற்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்திகளாக இருக்கும் இவர்கள் இருவரும் தொழில் ரீதியாக எதிர் துருவங்களாக இருந்த போதிலும், இருவருமே நல்ல நண்பர்கள். இந்த ‘நட்பு’ திடீரென இப்போது முளைக்கவில்லை! அது, அறிமுக காலத்திலேயே அரும்பிவிட்டது.
விஜய், ‘நாளைய தீர்ப்பு’ படத்துக்குப் பிறகு ‘செந்தூராப் பாண்டி’ யில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அஜித்தின் ‘அமராவதி’ வெளிவந்து ஓடிக்கொண்டிருந்தது. அஜித், ஒளிப்பதிவாளர் இமயவரம்பன், பிரபாகர் என்றொரு நண்பர் மூவரும் ‘அமராவதி’ க்கு ஆடியன்ஸ் வரவேற்பு எப்படி? என அறிய, வடபழனி கமலா தியேட்டருக்கு வந்திருந்தனர். அங்கு, ‘கேங்’காக படம் பார்க்க வந்தவர்களில் ஒரு இளைஞன், இமயவரம்பன் அங்கிருப்பதைப் பார்த்து; அஜித் ‘கேங்’ இருக்கும் இடத்திற்கு வந்தார். இருவருக்கும் ‘இன்ட்ரோ’ கொடுத்தார் இமயவரம்பன். அன்று, ஒருவரை ஒருவர் அணைத்தபடி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அப்போது, அவர்களுக்கே தெரியாது, நாளைய திரை உலகமே தல - தளபதி என்று அணி திரண்டு நிற்கும் என்று...
இன்றைக்கு, தல-தளபதி இருவருக்கும் இருக்கும் ரசிகர் படையைக் கணக்குப் போட்டுப் பார்த்து, இருவரையும் ஒரே படத்தில் இணையவைக்க இன்று எத்தனையோ பேர் தவம் கிடக்கிறார்கள். பெரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் செய்ய நினைக்கும் ஒரு பிரமாண்டமான விஷயத்தை, பல வருடங்களுக்கு முன்பே செய்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் ஒரு குட்டித் தயாரிப்பாளர். அவர் பெயர் சௌந்தர். அஜித்- விஜய் சேர்ந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை எடுத்தவர்.
எம்.ஜி.ஆர் – சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம் என, ‘கூண்டுக் கிளி’யை சொல்வதைப் போல, அஜித் – விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை சொல்லலாம்!
எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்? ‘ரீவைண்ட்’ செய்கிறார் தயாரிப்பாளர் சௌந்தர்...
“இயக்குநர் ஜானகி சௌந்தர்னு ஒருத்தர், டபுள் ஹீரோ சப்ஜெக்டோட வந்தார். ஒரு காதல் ஜோடியை, நண்பன் சேர்த்து வைக்கறது தான் கதை. இதுவொரு ‘லவ் யூத் ஸ்டோரி’, படமும் ‘பட்ஜெட்’குள்ள வரணும், இதெல்லாம் கணக்குப் போட்டுப் பாத்து, அந்த நேரத்துல ’அப் கம்மிங்’ல இருந்த அஜித், விஜய்யை நடிக்க வைக்கலாம்னு முடிவு செஞ்சோம். விஜய்யோட அப்பாகிட்ட பேசி அவர ‘கமிட்’ பண்ணிட்டேன்.
அஜித்தை எப்படி புடிக்கறதுனு தவிச்சப்போ, எங்க அண்ணன் கேமராமேன் ரமேஷ்குமார், ‘அஜித் எனக்கு நல்ல பழக்கம்’னு சொல்ல, அவர் மூலமா அஜித்தை சந்திச்சேன். நான் முதன் முதலா 1994 மார்ச் மாசம் சந்திச்சேன். ‘டபுள் ஹீரோ சப்ஜெட், நீங்க விஜய் கூட சேர்ந்து நடிச்சுக் கொடுக்கணும்’னு கேட்டுக்கிட்டேன். அவர், கதை கேட்டார், வேற எதப் பத்தியும் கேட்கல! ‘கட்டாயம் பண்றேன்’னு சொன்னார். அந்தப் படத்துல நடிக்க அவர் சம்பளமே வாங்கிக்கல! படத்துல யூஸ் பண்ணது அத்தனையும் அவரோட சொந்த காஸ்ட்யூம்ஸ். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்துல, விஜய்-இந்திரஜா காதல் ஜோடி! இவங்க காதலை சேர்த்து வைக்கும் நண்பனா அஜித் நடிச்சிருந்தார்.
தம்பி அஜித் மாதிரி ஒரு நேர்மையான நடிகனைப் பாக்கவே முடியாது! அவர்கிட்ட எனக்குப் பிடிச்சதே அந்த நேர்மை தான், சொன்ன சொல்லுக்கு நிப்பார்! ‘நமக்கு, நாக்கும்-வாக்கும் ஒண்ணுண்ணே’னு அடிக்கடி சொல்வார்.” என சொல்லி நிறுத்திய சௌந்தர், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் போது நடந்த மற்றொரு சம்பவத்தையும் ‘ரீவைண்ட்’ செய்தார்.
“என்னோட படத்துல சொந்தக் குரல்ல பேச அஜித்துக்கு ரொம்ப ஆசை! ஆனா, ’அவர் பேசினா நிறைய நேரமாகும், ‘டப்பிங் ஆர்டிஸ்ட்’ வச்சுப் பேசிக்கலாம்’னு சொன்னார் டைரக்டர். செலவு செய்ய பயந்துட்டு நானும் அதுக்கு சம்மதிச்சுட்டேன். இந்த குற்ற உணர்வு இப்பவும் எம் மனச கொடையுது. அதனால தான் இன்னைக்கு வரை அவர் முகத்தைப் பாக்காம இருக்கேன்.” என மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.
‘ராஜாவின் பார்வையிலே’ படப்பிடிப்பு 48 நாட்கள் நடந்தது. ‘சிட்டி’ க்குள்ளேயே ஷூட்டிங். எனவே, விஜய்யின் அம்மா, மகனுக்காக கொடுத்தனுப்பும் கேரியரில் தினமும் அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு இருக்குமாம். இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். ‘ஷாட் பிரேக்’ கில் மனம் விட்டுப் பேசுவார்கள்.
அப்போது அஜித், ஒரு எக்ஸ்ப்ளோரர் பைக் வைத்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கிலேயே வந்துவிடுவார். ‘லன்ச் பிரேக்’கில் அஜித்தின் பைக்கை வாங்கி விஜய் ‘ரவுண்ட்’ வருவதும், பிறகு விஜய்யை ஏற்றிக்கொண்டு அஜித் ‘ரவுண்ட்’ அடிப்பதுமாய் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலவென இருக்குமாம்.
05.08.1995 அன்று ரிலீஸ் ஆன ‘ராஜாவின் பார்வையிலே’ படம் சுமார். அந்தப் படமாவது கை கொடுக்குமென நம்பியிந்த அஜித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என தமிழில் நான்கு படங்கள் நடித்தும் அஜித்துக்கு, எந்த முனேற்றமும் இல்லை!
அஜித், சினிமாவில் நிலைத்து நிற்க உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது. அந்த முதல் வெற்றிக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அந்த முதல் வெற்றிக்கான விதை ‘பவித்ரா’ படம் வாயிலாக அஜித்துக்குக் கிடைத்தது. பவித்ரா படம், அஜித்துக்கு கை கொடுக்காமல் போனாலும், அந்தப் படத்தின் மூலமாக கிடைத்த ‘வாய்ப்பு’ தான்; அஜித்துக்கு திருப்புமுனையைத் தந்து, அவரின் சினிமாப் பயணத்தில் ‘முதல் சூப்பர் ஹிட்’ படமாக அமைந்தது! அந்தப் படம்...?
அமராவதி’ ஆவரேஜ் படம்தான்... அதனால், அஜித்துக்குப் புதுப்பட வாய்ப்பு எதுவும் வரவில்லை! மறுபடியும் ‘சான்ஸ்’ தேட ஆரம்பித்தார். கொஞ்சம்நஞ்சம் வந்துகொண்டிருந்த விளம்பர பட வாய்ப்புகளும் சுத்தமாக இல்லாமல் போனது. அதனால், பொருளாதார ரீதியாகச் சிரமப்பட்டார்.
அப்போது, பிரபல வசனகர்த்தா ஏ.எல்.நாராயணின் மகன் ஏ.எல்.என்.மோகன், தான் இயக்கும் சீரியலில் ஹீரோவாக நடிக்க அஜித்தைக் கூப்பிட்டார்.
“சினிமா சான்ஸ் வரும் போது வரட்டும், இது நல்ல சான்ஸ், விட்றாத! சீரியலுக்குப் போனா சிரமமில்லாம இருக்கலாம்!” என நண்பர்களும் ‘அட்வைஸ்’ பண்ணினார்கள். ஆனால், அந்த வாய்ப்பை அஜித் ஏற்கவில்லை.
‘சின்னத்திரையில் நடிப்பதொன்றும் சிறுமையில்லை, சினிமாவுக்காக வந்த பிறகு பணத் தேவைக்காக ஏன் பாதை மாறணும்! நிச்சயமா சினிமாவில் ஜெயிக்க முடியும்!’ என்கிற வைராக்கியத்தோடு காத்திருந்தார் அஜித்.
நடிகை ரேவதியின் கணவரும், இயக்குநருமான சுரேஷ் மேனன், ‘பாசமலர்கள்’ படம் ஆரம்பித்த தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார் அஜித். சுரேஷ் மேனன் எடுத்த விளம்பரப் படங்களில் நடித்த போது ஏற்பட்ட அறிமுகம் இருந்ததால், ‘பாசமலர்கள்’ பட வாய்ப்புக் கிடைத்தது. அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக நடித்தார் அஜித்.
படப்பிடிப்பில் பல மனக் கசப்புகள், ‘தூக்கிப் போட்டுட்டு வந்திரலாமா?’ என ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தாலும், எதிர்காலத்தை நினைத்து மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடித்தார்.
சினிமாவுக்குள் வந்த ஆரம்பத்தில் ஒரு போராட்டமான சூழ்நிலையிலேயே, தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் தவிப்பிலேயே இருந்தார் அஜித். ஆனாலும், ‘சினிமால பெரிய சாதனை செய்யணும், நட்சத்திர நாயகனாக மாறணும்’ என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். வெறும் வாய்சொல் வீரனாக இல்லாமல், அதை அடைய தீவிரமாக முயற்சி செய்தபடியே, தன்னைப் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியபடியே இருந்தார்.
அதனால் தானோ; அவருக்கு அப்படியொரு சோதனை வந்தது! சினிமாவுக்கு அடுத்து அஜித் நேசிப்பது ‘பைக் ரேஸ்’! அவரின் பலமும் அது தான், பலவீனமும் அதுதான்!
அப்போது நடந்த ஒரு பைக் ரேசில் பங்கேற்று, விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகியிருந்தார். உயிருக்குப் போராட்டமான நிலையில் இருந்த அஜித்தை, ஆபரேசன் செய்து டக்டர்கள் காப்பாற்றினார்கள். ‘கொஞ்ச காலத்துக்கு எழுந்து நடக்கக் கூடாது’ என டாக்டர்கள் சொல்லவே, ‘பெட் ரெஸ்ட்’ டில் இருந்தார் அஜித்.
அந்தச் சமயத்தில்; அஜித்தின் வைராக்கியத்தையும், தன்னம்பிக்கையையும் சோசித்துப் பார்ப்பதற்காகவே ஒரு பட வாய்ப்ப்பு அவரைத் தேடி வந்தது!
கே.சுபாஷ் இயக்கத்தில், ராதிகா-நாசர் இருவரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்த ‘பவித்ரா’ படத்துக்கு ஒரு இளம் நாயகனைத் தேடிக்கொண்டிருந்தனர். அந்த வாய்ப்பு அஜித்தை தேடிவந்தது. ஆனால், அஜித் ‘பெட் ரெஸ்ட்’ டில் இருந்தே தீரணும். ‘சும்மா இருந்த போது வராத சான்ஸ், சுகமில்லாம இருக்கும் போது வருதே!’ எனத் தனது நிலையை நினைத்து நொந்து கொண்டார்.
அஜித், ‘பெட் ரெஸ்ட்’ டில் இருக்கும் தகவல் அறிந்த இயக்குனர் கே.சுபாஷ், “அப்படிப்பட்ட ஒரு ஆள் தான் எனக்குத் தேவை!” எனத் தீர்மானமாகச் சொல்ல, ‘இவருக்கு என்னாச்சு? ‘பெட் ரெஸ்ட்’ல இருக்கற ஒரு ஆளப் போயி நடிக்க வைக்கத் துடிக்கறாரே! வேற ஆளா கிடைக்காது!’ எனப் பேச்சு வந்தது. ஆனால், அஜித்தை நடிக்க வைக்கும் முடிவில் உறுதியா இருந்தார் கே.சுபாஷ்.
ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டத்தை மையப்படுத்திய ‘பவித்ரா’ படத்தின் கதை, ஒரு மருத்துவமனையின் பின்னணியில் நடப்பதாக இருந்தது. அந்த மருத்துவமனையில், ஆபரேசன் முடிந்து ‘பெட் ரெஸ்ட்’ டில் இருக்கும் ஒரு இளைஞனின் கதாப்பாத்திரத்தில் தான் அஜித் நடிக்க வேண்டியிருந்தது.
இதை இயக்குநர் விளக்கி சொன்னதும், தனது உடல் நிலையைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தான் இப்போதுள்ள சூழ்நிலையோடு கதை பொருந்திப் போவதால் நடிக்கச் சம்மதித்தார் அஜித். தினமும் வீல் சேரில் வந்து படப்பிடிப்பில் பங்கேற்று, ‘பவித்ரா’படம் முடியும் வரை படத்துக்கொண்டே நடித்தார் அஜித்.
விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஜீவா போன்ற வாரிசு நடிகர்களுக்கு ‘சினிமா கதவு’ எளிதாகத் திறந்தது போல, அஜித்தின் திரைப்பிரவேசம் அவ்வளவு சுலபமானதல்ல!
எந்தப் பின்னணியும் இல்லாமல், சினிமாவுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, தன்னைத் தானே செதுக்கியபடியே சிற்பமாக உருவான ரஜினிகாந்த் - விஜயகாந்த் போல, சினிமாவின் அந்த முரட்டுக் கதவை முட்டி மோதி திறக்க செய்து; முன்னுக்கு வந்தவர் அஜித். போர்க்களத்தில் அவர், இப்பவும் துடிப்பான போர் வீரனாக நிற்கிறார் என்றால்; அதற்குப் பின்னணியில் இருப்பது அஜித்தின் தன்னம்பிக்கை தான்! அஜித்தை பொறுத்தவரை, தைரியமும் - தன்னம்பிக்கையும் தான் அவரின் இணை பிரியாத நண்பர்கள். அதை மட்டும் அவர், எப்போதும் கை விட்டதே இல்லை!
அஜித் அளவுக்குத் தொழில் ரீதியாக வாரிசு நடிகர்கள் பாதிப்புக்கு ஆளாகாததற்குக் காரணம் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட அவர்களின் தந்தைகள், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். தங்களது வாரிசுக்கான கதைகளை, படக் கம்பெனிகள், இயக்குநர்களைச் சல்லடையில் சலித்தெடுத்தார்கள். பத்திரிகையாளர்களை நட்பாக்கி தங்களின் வாரிசுகளுக்கு விளம்பரம் தேடித் தந்தார்கள். இப்படியாக, தங்களின் பிள்ளைகளுக்குப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்தார்கள். ஆனால், அஜித் விஷயத்தில் இதெல்லாம் பண்ண ஆள் இல்லை!
“என்னோடு களத்துல நிற்கும் சக நடிகர்களுக்கு ‘லாபி’ பண்ண ஆள் இருக்காங்க, எனக்கு இல்லை. தனி மனுஷனா நின்னு போராடுறேன்” என ஒரு நேர்காணலில் தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறார் அஜித்.