1. Home
  2. தமிழ்நாடு

மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் பிரியங்கா..!!

மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் பிரியங்கா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா கூறுகையில்,"இந்தப் பெண்கள் நாட்டிற்காக பதக்கங்கள் வாங்கிய போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக நாம் அவர்களைக் கொண்டாடினோம். தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் போராடும் போது, அவர்களின் வலியை கேட்க யாரும் தயாராக இல்லை. அவர்களைக் குறை கூறவும் செய்கிறோம். உண்மையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் நகலை வீரர்களுக்கு வழங்க வேண்டும்.

அந்த நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவர் முதலில் பதவி விலக வேண்டும். அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்கும் வரை, வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியும். இந்தநிலையில் வழக்குப்பதிவு, விசாரணைக்களுக்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனக்கு பிரதமரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மையில் இந்த வீராங்கனைகள் மீது அவருக்கு அக்கறை இருந்திருந்தால், பிரதமர் இவர்களை அழைத்துப் பேசியிருப்பார். இவர்கள் பதக்கங்கள் வெல்லும் போது இவர்களை பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அதனால் அவர்களை அழைத்து பேசுங்கள். அவர்கள் நமது பெண்கள்.

குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்ற ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நிறைய செய்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவர்கள் (அரசு) அந்த மனிதரைப் பாதுகாக்கிறார்கள். நம் பெண்களை நாம் காப்பாற்ற முடியவில்லை என்றால் நாட்டை பற்றி என்னவென்று சொல்வது" என்றார்.

Trending News

Latest News

You May Like