படம் பார்க்க வந்தவர்களுக்கு காலை உணவு.. கார்த்தி ரசிகர்கள் அசத்தல்!
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சோழ - பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக 2ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்தது. மேலும், படக்குழுவினரும் ஒவ்வொரு மாவட்டமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். பிற மொழிகளிலும் புரமோஷன் செய்யும் பணிகள் நடைபெற்றன.
இதனையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ‘பொன்னின் செல்வன் 2’ திரையிடப்பட்டது.
காலை முதல் காட்சியையொட்டி புதுவை மாநில கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக தியேட்டர் வாயில் முன்பு ரசிகர்கள் மற்றும் படம் பார்க்க வருபவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் பேனருக்கு பூமாலை தூவி ரசிகர்கள் படத்தை வரவேற்றனர்.