தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள்!!

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன.
ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் முதல்கட்டமாக சூடானில் இருந்து 360 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

முன்னதாக சூடானில் இருந்து இந்தியர்கள் கப்பல் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனர். ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றி கொண்டு விமானம் டெல்லி வந்தடைந்தது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட உள்ளனர். டெல்லி வந்த இந்தியர்களில் 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.
இந்நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கும், tnhouse@nic.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
96000 23645, nrtchennai@gmail.com என்ற சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் செல்போன் எண் மற்றும் இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in