ஸ்ரீகாகுளம் டூ ரேணிகுண்டா... கொட்டும் மழையில் துடித்து கொண்டே வந்த இதயம்.. மறுபிறவி எடுத்த சிறுமி!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அங்கு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
Also Read - திருமண வயதை குறைக்க சீன அரசு திட்டம்!
இந்த நிலையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் மாலை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இதயத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு மருத்துவர்கள் பொறுத்தினர். இதயத்தை கொண்டு சென்றபோது மழையும் வந்துவிட்டதால், மருத்துவ பணியாளர்களுக்கு அவ்விடத்தில் கூடுதல் சவால் ஏற்பட்டுள்ளது.

ஒருவழியாக கொட்டும் மழையில் ஓடோடி வந்து இதயத்தை மருத்துவர்கள் வசம் அவர்கள் ஒப்படைத்தனர். இக்காட்சிகள், அங்கிருந்தவர்களை நெகிழச்செய்தது. அச்சிறுமி, தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள திருப்பதி மாவட்டம் தடா மண்டலம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமியென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.