நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மாற்றுவோம் : ராகுல் காந்தி..!!
கர்நாடகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
இப்போது 2 - 3 கோடீஸ்வரர்கள் மீது மட்டுமே அரசின் கவனம் உள்ளது. ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. வங்கிகளிலிருந்து கோடீஸ்வரர்கள் எளிதில் கடன் பெற முடிகிறது. செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அரசு அதனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.
ஐந்து விதமான வரி விதிப்பு மிகவும் சிக்கலானது. நாட்டில் பாதி மக்களுக்கு வரியை எப்போது எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று புரியவில்லை. மிகப்பெரிய செல்வந்தர்கள் தனி கணக்காளர்களை வைத்துள்ளனர். ஆனால், சிறிய தொழில் செய்பவர்களுக்கு அது சாத்தியமில்லை. அதனால் சிறுதொழில்கள் தேக்கமடைகின்றன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைப்போம். மிக எளிமையான சிறிய வரிவிதிப்பை ஒரே வரி முறையாக கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.