நீட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா? உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு..!!
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வினை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நீட்தேர்வு மே 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பதிவு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதியுடன் நிறைவடைவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. பின்னர் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13-ந் தேதி (நேற்று ) வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வுமுகமை அறிவித்துள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கு மாணவர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.