தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி!!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அந்த அமைப்பினர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.
இதனை அடுத்து 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். உள்ளரங்கில் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அப்போது வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, பொது சாலைகளில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை சரிசெய்யவேண்டியது காவல்துறையினரின் கடமை என்று கூறினர்.
எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. எனவே, தமிழ்நாட்டில் விரைவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in