இனி வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்: சுப்ரீம் கோர்ட்..!!
இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் முக கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று கூறும்போது, கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்ற பத்திரிகை செய்திகளை நாங்கள் பார்த்தோம். அதனால், வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராவது மற்றும் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவது ஆகிய இரண்டு முறைகளையும் பயன்படுத்தலாம். நீங்கள் ஆன்லைன் வழியே வழக்கில் ஆஜராகி வாததிட்டாலும், நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்த பின்னர், டெல்லி மற்றும் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததும் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிடும் முறைக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் திரும்பியது. அதற்கு முன்பு, நேரில் வந்து வழக்கு விசாரணை செய்வது மற்றும் வீட்டில் இருந்தபடி என இரு நிலையிலும் சிறிது காலத்திற்கு, சுப்ரீம் கோர்ட் சிறப்பான முறையில் செயல்பட்டது.
இதுதவிர, சுப்ரீம் கோர்ட்டுக்கான செயலி மற்றும் யூடியூப் வழியேயும் அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை விவரங்கள் நேரிடையாக ஒலிபரப்பு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிடும் முறை வந்த பின்னரும், இந்த நேரடி ஒலிபரப்பு மக்களை சென்றடைந்தது.