இனி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது., தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம்.
ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே அனைவரும் முககவசம் அணியவேண்டும். முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே முககவசம் அணியவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.