ட்விட்டர் லோகோவை மாற்றினாரா எலான் மஸ்க்..?
பிரபல சமூக வலை தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதன் பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நிலையில் ட்விட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். நீல நிற குருவிக்கு பதில் நாய் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது.
டாகி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. பிட்காயின் போன்ற பிற கிரிப்டோ கரன்சிகளை கேலி செய்யும் வகையில் 2013-ம் ஆண்டு டாகி காயினுக்கு ஷிபா இனுவின் நாய் படம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி எலான் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் ஷிபா இனுவின் நாய் படத்தை வெளியிட்டு ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.