நெஞ்சை உலுக்கிய சம்பவம்!! நடனம் ஆடும் போதே மாணவன் பலி..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கோகுல் (19). இவரது சொந்த ஊர் திருவாரூர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டுகளில் பங்கேற்ற மாணவர்களை மற்ற மாணவர்கள் மைதானத்தை சுற்றிலும் நின்று கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வந்தனர்.
கோகுலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக கல்லூரி நிர்வாகம் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த அழகப்பாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் ஆண்டு விழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.