பிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.
ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் 300 டன் எடையும் 96 அடி உயரமும் கொண்டது. பங்குனி உத்திரம் கொண்டாடும் வகையில் இன்று திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது.
காலை ஐந்து மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 7.30 மணி அளவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்ற முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழத் தெருவில் தொடங்கி நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.
ஆழித் தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. அதேபோல் தமிழக காவல்துறை சார்பில் சுமார் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in