நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு - ரோகிணி தியேட்டர் கொடுத்த விளக்கம்..!!
பத்து தல படத்தை காண நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறுவன் ஒருவருடன் வந்துள்ளார். அவர் படம் பார்க்க டிக்கெட்டும் எடுத்துள்ளார். ஆனால் வாசலில் டிக்கெட் பரிசோதனை செய்தவர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களை வெளியே செல்லும் படி திட்டியதாக கூறப்படுகின்றது.
இதனைக் கண்ட படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், டிக்கெட் பரிசோதனை செய்யும் நபரிடம் முறையிட்டுள்ளார். டிக்கெட் வைத்திருந்தும் ஏன் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார். ஆனால் அந்த நபரோ உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், அங்கிருந்து கிளம்பச் சொல்லுயும் அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளார். அந்தப்பெண் பலமுறை கெஞ்சியும் அந்த நபர் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, டிக்கெட் எடுத்தும் நரிக்குறவர் சமூகம் என்பதற்காக தீண்டாமையை செய்திருக்கிறது என்று எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திருமாவளவன் எம்.பியையும் டேக் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் ரோகிணி தியேட்டரை பலரும் திட்டி பதிவிட்டனர். இதற்கு நடுவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்,'அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது' என ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில்.ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவ குடும்பத்தை சேர்த்தவர்கள் படம் பார்ப்பது போல வீடியோவை ஷேர் செய்துள்ளனர். அதோடு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், பத்து தல படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால், குழந்தைகள் படம் பார்க்க அனுமதி இல்லை என்றும், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.