நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலையில் சாப்பிடுவது காலை உணவு திட்டத்தில் தான்..!!
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலையில் சாப்பிடுவது காலை உணவு திட்டத்தில் தான். இந்த திட்டத்தில் நானும் ஒரு பயனாளி. காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகள் செய்த பணிகளை திமுக அரசு 2 ஆண்டுகளில் செய்து முடித்துவிட்டது என்பதை நீங்கள் உணரலாம். 29 மாவட்டங்களில் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்களை விற்கும் பூமாலை வளாகங்கள் ரூ.6.16 கோடியில் புதுப்பிக்கப்படும். எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில்தான், நான் சாப்பிடுகிறேன், அதில் நானும் ஒரு பயனாளி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு பரிசளிக்கும்போது, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களையே பரிசளிக்க வேண்டும். ‘ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள்’ என்ற திட்டம் மூலம் வட்டார அளவில் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் ஒரு பொருளைச் சந்தைப்படுத்த ரூ.5 கோடி மதிப்பில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற 3 மாதத்தில், திண்டுக்கல், சிவகங்கை, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று அமைச்சராக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கூட்டமும் நடத்தினோம். என்ன திட்டம் நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம். அதிமுக உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முறையாக உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆலோசனைகள் எங்களுக்கு வழங்க வேண்டும்,” என்றார்.