இனி ரேஷன் கடைகளில் மானிய விலையில் கம்பு, சோளம், கேழ்வரகு..!!
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்: "குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. கணினி மயமாகப்பட்டு ஆன்லைன் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. சேவைகள் துரிதப்படுத்தப்படும்.
ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு புதிய திட்டப்படி இலவச அரிசி, மானிய சர்க்கரை, சிறுதானியங்கள் தரப்படும். சிறுதானிய ஆண்டு என்பதால் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் ரேஷனில் தரப்படும் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மக்கள் குறைகளை கேட்க கால் சென்டர் இந்தாண்டு அமைக்கப்படும். மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும். இதற்கு லாஸ்பேட்டையில் நவீன கட்டிடம் கட்டப்படும்.
4263 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25 கோடி மத்திய அரசிடம் பெற்று ரூ. 17. 5 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 814 புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 குழுக்கள் மூன்றாம் பாலினத் தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. தலா ரூ.15 ஆயிரம் சுழல் நிதி தரப்பட்டது" என அமைச்சர் கூறினார்.
அதையடுத்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் எழுந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரியை மீண்டும் அங்கு பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் எழுந்தது. இதையடுத்து அந்த துணை இயக்குநர் அதிகாரியை உடன் மாற்றுவதாக அமைச்சர் சாய் சரவணன் குமார் உறுதி தந்தார்.