அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி..!!
1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு வரையில் எம்.ஜி.ஆர். வசமே இருந்த இந்த பதவியில் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் அமர்ந்தார். 2 ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து 3-வது பொதுச்செயலாளராக ப.உ.சண்முகம் 4.5 ஆண்டுகள் வரையில் இருந்தார்.
அவரை தொடர்ந்து ராகவானந்தம் 1.5 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார். இதையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மறையும் வரை அந்த பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா அமர்ந்தார். 27 ஆண்டுகள் 300 நாட்கள் என அதிகாரம் மிக்க இந்த பதவியை ஜெயலலிதா தனது ஆளுமையால் அலங்கரித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா 48 நாட்கள் மட்டுமே பொதுச்செயலாளராக இருந்தார். இதையடுத்து நேற்று 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் இறுதியாக பொதுச்செயலாளரே கையெழுத்திட வேண்டும் என்பது அ.தி.மு.க. விதிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது. இதன்மூலம் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.