ராகுல் காந்திக்காக என் பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே..!!
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீசை ராகுல் காந்திக்கு அனுப்ப மக்களவைக்கான பங்களா ஒதுக்கீடு குழு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நோட்டீசை மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு அனுப்பியது.
இதற்கு நேற்று பதில் அளித்த ராகுல் காந்தி, ''எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்கிறேன். இதுவரை இங்கு கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானவை. பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கான வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி. பங்களாவை காலி செய்வதற்காக எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுவேன்'' என தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, ''ராகுல் காந்தியை பலவீனப்படுத்த அவர்கள் (பாஜக தலைமையிலான அரசு) முயல்கிறார்கள். ராகுல் காந்தியை பயமுறுத்த, அச்சுறுத்த அரசு முயல்வதை நான் கண்டிக்கிறேன். சில நேரங்களில் மூன்று, நான்கு மாதங்களுக்கு எங்களுக்கு (பாராளுமன்ற உறுப்பினர்கள்) பங்களா ஒதுக்கப்படாத நிலை இருக்கும். நான் தற்போது வசிக்கும் பங்களாகூட 6 மாதங்களுக்குப் பிறகே எனக்கு ஒதுக்கப்பட்டது. ராகுல் காந்தி தனது பங்களாவை காலி செய்துவிட்டு தனது தாயாரோடு வசிக்கலாம். என்னிடமும் அவர் வர முடியும். அவருக்காக நான் காலி செய்ய தயார்'' என கூறியுள்ளார்.