பச்சிளம் குழந்தையைக் கொன்ற சிறுமிகள்.. பொம்மை போல நினைத்து விளையாடிய போது நேர்ந்த விபரீதம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளும் குழந்தையைக் குளிப்பாட்ட முயற்சித்தபோது, குழந்தை அவர்களிடமிருந்து நழுவி வாளிக்குள் விழுந்துவிட்டது. நீர் நிறைந்த வாளிக்குள் இருந்து குழந்தையை வெளியே எடுக்க முடியாததால் சிறுமிகள் பீதியடைந்துள்ளனர். பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து வாளியின் மீது ஒரு மூடியை போட்டு மூடி வைத்துவிட்டனர் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 22-ம் தேதி இரண்டு மாத கைக்குழந்தையை காணவில்லை என பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காணாமல்போன குழந்தையை வீட்டில் தேடியபோது, கண்டுபிடிக்க முடியாததால், குழந்தை யை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால் பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரில் தனது சகோதரிகளோடு விளையாடிக்கொண்டிருந்த 2 மாதக் குழந்தை அனார்ஜாவை படுக்கையில் உறங்க வைத்துவிட்டுச் சென்றதாக தாய் ருக்சார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வாளிக்குள் இருக்கும் குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, போலீசாரின் கவனம் இரண்டு சகோதரிகள் மீது திரும்பியது. போலீசார் அவர்களிடம் பேசியபோது, அவர்கள் சோகத்துடன் உண்மையைக் கூறியுள்ளனர்.
தங்கள் தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது சிறுமிகள் இருவரும் ஒரு டெடி பியர் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாவும், விளையாட்டை நிறுத்தியதும் அம்மா டெடி பியர் பொம்மையை குளிப்பாட்டி, சுத்தம் செய்து காயவைக்க வெயிலில் தொங்கவிட்டதாகவும் அதேபோல தங்களுடைய சகோதரியான குழந்தை அனார்ஜாவையும் ஒரு வாளியில் குளிப்பாட்ட வேண்டும் என நினைத்தகாவும் சிறுமிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனால் படுக்கையில் இருந்த குழந்தை அனார்ஜாவை குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை வாளியின் விளிம்பில் வைத்துப் பிடித்தபடி குளிப்பாட்டத் தொடங்கியபோது, குழந்தை கையை விட்டு நழுவி வாளியில் விழுந்திருக்கிறது. சிறுமிகள் தாமாகவே ஒப்புக்கொண்டதை அடுத்து 2 மாதக் குழந்தை அனார்ஜாவின் மரணத்திற்கு சகோதரிகளே தற்செயலான காரணம் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 82வது பிரிவின்படி, 7 வயதுக்குட்பட்ட குழந்தை செய்த குற்றத்தை பதிவு செய்ய முடியாது. எனவே சிறுமியரின் வயது காரணமாக, அவர்களின் செயல் குற்றமாகக் கருதப்படவில்லை என நர்மதாபுரம் எஸ்பி குர்கரன் சிங் தெரிவித்துள்ளார்.