இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழ்நாடு அரசு திட்டம்..!!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 14,13,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக கூறினார். மேலும் சுகாதார பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
1,021 மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் இதற்கான தேர்வு வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார். இதேபோன்று, 986 மருந்தாளுநர் பணிக்கான தேர்வும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.