கோவையில் மின் கம்பம் விழுந்து யானை உயிரிழப்பு..!!
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கிராமங்களும் விவசாய நிலங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உணவைத் தேடி காட்டு யானைகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக யானை-மனித மோதல்கள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. அதோடு விவசாய பயிர் சேதமும் ஏற்படுகின்றன. மேலும் அப்படி வரும் யானைகளை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து காட்டுக்குள் விரட்டும் நிகழ்வுகளும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் மலை கிராமத்தில் 30 வயதுடைய காட்டு யானை ஊருக்குள் வந்தது. இந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, சமதளப் பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது யானை மோதியது. இதில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.