இனி அனைத்து காப்பகங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு..!!
![இனி அனைத்து காப்பகங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/45144b86af67e68ee83d81b3a3e3374f.webp?width=836&height=470&resizemode=4)
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது.
மேலும் ஆசிரமத்தில் இருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 16 பேர் வரை காணாமல் போனது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.இதையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, பதிவு செய்யாமல் இயங்கி வந்த ஆறு புனர்வாழ்வு இல்லங்களுக்கு மாநில மனநல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரங்கள் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் நேரில் சென்று ஆய்வு நடத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.