சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்..!!
2016 மே 1-ம் தேதி நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது.இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி, வைப்புத் தொகை உட்பட 1,600 ரூபாயை மத்திய அரசே வழங்கும். மேலும், திட்ட பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் 9 கோடிக்கும் அதிக பயனாளர்கள் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 35 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.