“உப்பு சப்பு இல்லாத வழக்கு…” – கார்த்தி சிதம்பரம் விளாசல்!!
ராகுல் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உப்பு சப்பு இல்லாத இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறியுள்ளார்.
கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிந்தது.
இதையடுத்து நேற்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், இந்த நடவடிக்கை நேற்றே எதிர்ப்பார்த்ததுதான் என்றும், உச்சநீதிமன்றத்தை நாடி வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உப்பு சப்பு இல்லாத வழக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
newstm.in