யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்..!!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்துள்ளோம். மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. தேர்தல் களத்தில் நிற்பவர்கள் அனைவரும் வெற்றி பெற்று வரும் வகையில் பலமாக இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
இதனிடையில் நான் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று ராகுல்காந்தி கூறியதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடும்படி அறிவுறுத்தியதாகவும் மீடியாக்களில் செய்தி வருகிறது. நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
கட்சி தலைமை எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் போட்டியிடுவேன். தற்போது எங்கள் நோக்கம் கட்சியை வெற்றிபெற செய்து ஆட்சியில் அமர்த்துவது மட்டுமே. இந்த லட்சியத்தில் தான் நான், சிவகுமார் உள்பட அனைவரும் உழைத்து வருகிறோம். வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என்றார்.