பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!! உணவு தேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!! உணவு தேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
X

கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அந்த யானைகள் கடந்த மாதம் தனித் தனிக்குழுக்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன.


அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 மாதங்களாக மக்னா யானை ஒன்றும் ஆண் யானை ஒன்றும் சுற்றி திரிந்து வந்தது. பயிர்களை சேதப்படுத்திய மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆண் ஒற்றை யானை மட்டும் கிராமப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்தது.

இந்த நிலையில் கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி கிராமத்தில் நுழைந்த அந்த யானை, விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் தலை, காது பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து கண்காணித்தப்படி வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானையின் உடலை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 17 மணி நேரமாக எங்கும் நிற்காமல், யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் நடந்து வந்த ஆண் யானை, இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வேதனை அளிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதுபோலவே, 10 நாட்களில் 4 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story
Share it