குவியும் பாராட்டுக்கள்..!! ஆம்புலன்ஸ்க்கு வழி ஒதுக்கித் தரும் பைக் எஸ்கார்ட் சேவை!
போக்குவரத்து நெரிசல் காரணமாக, சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போகலாம். இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. அத்தகைய நோயாளிகளுக்கு உதவ, பெங்களூரின் வடகிழக்கு மண்டலத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரியும் 27 வயது இளைஞரான ஸ்ரீ ராம் பிஷ்னோய், ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பைக் எஸ்கார்ட் எனும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
இப்போது தனி ஒருவராகத் தனது பைக்-எஸ்கார்ட் சேவையை வழங்கும் பிஷ்னோய், விரைவில் அரசு சாரா நிறுவனத்தை (என்ஜிஓ) அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.
“போக்குவரத்தை கண்காணிக்க தன்னார்வலர்களின் நெட்வொர்க்கை உருவாக்க விரும்புகிறேன். அவர்கள் எமர்ஜென்ஸி அழைப்புகளின் பேரில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உதவி தேவைப்படும் இடத்தை அடைந்து, போக்குவரத்தில் சிக்கியுள்ள ஆம்புலன்ஸ்களுக்கான வழிகளை உருவாக்க உதவுவார்கள். அவர்கள் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வார்கள், ”என்று அவர் கூறுகிறார். வாகன ஓட்டிகள் பெரும்பாலும் ஆம்புலன்ஸ் செல்ல வழி உண்டாக்கித் தருவதில்லை. அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மெடிக்கல் எமர்ஜென்ஸி சைரனைப் புறக்கணித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னேறிச் செல்கிறார்கள். எனவே போக்குவரத்தை சரிசெய்வதன் மூலம் ஆம்புலன்ஸ்களுக்கு போதுமான இடத்தை எஸ்கார்ட் சேவை உறுதி செய்யும் என்று ஒரு சில ஆம்புலன்ஸ் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தனது பைக்-எஸ்கார்ட் சேவையை வழங்க, அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிஷ்னோய் கூறுகிறார். ராஜஸ்தானை சேர்ந்த பிஷ்னோய், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இதேபோன்ற ஒரு முயற்சி சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஒரு குழுவினரால் தொடங்கப்பட்டது. இது அவரை பெங்களூரில் தொடங்க தூண்டியது. பல தன்னார்வத் தொண்டர்கள் அவருடைய என்ஜிஓவில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.