சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு அறிவிப்பு..!!
1991 ஆம் ஆண்டு முதல் கே.கே. பிர்லா நிறுவனத்தால் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான இந்த விருதினைப் பெறுபவர்களுக்கு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்தியாவின் 22 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு - சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
தமிழில் ஏற்கெனவே, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, அ.அ. மணவாளன் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றிருக்கின்றனர். விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதாவது 2022ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருதுக்கு 2012 - 2022 வரை வெளியான புத்தகங்களிலிருந்து ஒரு புத்தகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குமார் சிக்ரி தலைமையிலான குழுவினர் 22 மொழிகளிலிருந்து 22 புத்தகங்களைத் தேர்வு செய்து, பின்னர் அதிலிருந்து 5 புத்தகங்கள் விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர். அந்த 5 புத்தகங்களில் ஒரு புத்தகத்துக்கு சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2019-ல் வெளியான சூரிய வம்சம் - நினைவலைகள் என்ற இவருடைய நூலுக்காக சிவசங்கரிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.