திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!
திருச்சியில் திமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சில முக்கிய திமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.பி.ஐ காலனியில் அமைந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டுக்கு அருகே இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார்.
இதற்கான பெயர் பலகையில் எம்.பி சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டினர்.
கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.
கருப்பு கொடி காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், காவல் நிலையத்திலும் தி.மு.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்டோரை நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
newstm.in