ஈபிஎஸ் புகைப்படத்தை எரித்த பாஜகவினர் கைது!!
எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்த பாஜகவை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணனும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
மேலும், பாஜவின் அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலாளர் கிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.
இதற்கு பாஜகவினர் அதிமுகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், பா.ஜ.க தலைமையை விமர்சித்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களை அ.தி.மு.கவில் இணைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பா.ஜ.க சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘எங்கள் அண்ணன் அண்ணாமலையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பா.ஜ.கவிலிருந்து விலகிய நிர்வாகியை அ.தி.மு.கவில் சேர்த்துக்கொண்ட கூட்டணித் தர்மத்தைப் போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியைக் கண்டிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அ.தி.மு.க, பா.ஜ.க இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை எரித்த விவகாரத்தில் பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
newstm.in