மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!
X

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடக்கிறது.

2-வது நாளான நாளை (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பக்தர்களால் அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், ஒரு மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெறுகிறது.

3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நடைபெறுகிறது. திருவிழாவின் 10-வது நாளான 14-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதலும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story
Share it