பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராக கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக எதிரணி உருவாக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது மிக முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. அதுவும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாநாடு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க செய்து வரும் முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராக கூடாது என்று கூறினார். அவரது கருத்து தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
newstm.in