தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் : முதலமைச்சர் காட்டம்!!
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது கோழைத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல, கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தி நடத்தியுள்ளனர்.
கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in