திப்பு சுல்தான் வாரிசுகளை குறித்து பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு..!!
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொப்பால் மாவட்டம் எலபுர்காவில் பாஜ சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சர்ச்சைக்கு பேர்போன கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தங்களை ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் என்றும், திப்புவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திப்பு ஆதரவாளர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறிய அவர், திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமா? ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் வேண்டுமா? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
மேலும் திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது என்றும், ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் நளின் குமார் தெரிவித்தார். அவரது பேச்சு மத வெறுப்பை தூண்டும் வகையில் உள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.