வீரர்களின் தியாகத்தை மறக்க மாட்டோம் : பிரதமர் மோடி!!
புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதியது.
பயங்கரவாதிகளின் இந்த கொடூர செயலால், இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது.
இன்று புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களை நினைவுகூருகிறேன். அவர்களின் அற்புதமான தியாகத்தை நம் யாராலும் மறக்க முடியாது. அவர்களின் வீரம், வலுவான மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in