பாஜகவின் அடுத்த இலக்கு இது தான் - திருமாவளவன்..!!
சென்னை ஆலந்தூர் மண்டித் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன் கூறியதாவது: பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் உறுப்பினர் 2020ல் தாக்கல் செய்த மசோதா அண்மையில் விவாதத்திற்கு வந்தது. பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் மாநிலங்களைவில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்பரிவார் அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் அதிகம் இருந்தாலும், ஒரே செயல்திட்டமாக தான் இருக்கிறது. அவர்களின் ஒட்டுமொத்த இலக்காக இருப்பது இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக அறிவிக்க வேண்டும், இந்து ராஷ்டிரா என அறிவிக்க வேண்டும் என்பது தான்.
அவர்களின் இறுதி இலக்கு அரச மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்பது, இதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டும் தான். இதனால் தான் அவர்கள் ஒவ்வொரு கனவு திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். எஞ்சி இருப்பது பொது சிவில் சட்டம் தான், இதையும் நிறுவி விட்டால் அரசியலமைப்பு சட்டம் நீர்த்து போகும். புரட்சியாளர் அம்பேத்கர் பொதுசிவில் சட்டத்தை தடுத்து சட்டத்தை கொண்டுவர, அவருடைய கடுமையான உழைப்பு காரணமாக இருந்தது. அரசியல் நிர்ணய சபை தான் அப்போதைய சபை, குடியரசு தலைவர் தலைமையில் கூடும். அப்போது கடுமையான விளக்கங்கள் கேட்டார்கள், கடைசியாக முழுமையாக ஏற்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.