போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்த சலுகை அறிவிப்பு!!
நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் கட்டினால் 50% சலுகை என கர்நாடக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
வாகன தணிக்கையின் போது பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தில் ரூ. 530 கோடி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது.
தலைநகர் பெங்களூருவில் மட்டும் ரூ. 500 கோடி பாக்கி உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்கும் வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர்.
அதன்படி நிலுவையில் உள்ள அபராத தொகையை வரும் 11ஆம் தேதிக்குள் கட்டினால், விதிக்கப்பட்ட தொகையில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். அதாவது 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தார் 2,500 கட்டினால் போதுமானது.
பெங்களூருவில் உள்ள 48 போக்குவரத்து காவல்நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியுடன் கட்டலாம். அல்லது நகரில் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து மேலாண்மை மையங்களில் செலுத்தலாம்.
அல்லது https://bangaloretrafficpolice.gov.in என்ற தளத்தின் வழியே ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிற்கு வெளியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு சென்றும் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in