நீங்க படிச்சது உண்மைதான்... காதலர் தினம் கொண்டாட ஆணுறை இலவசமாக தரும் அரசு..!
காதலர் தினத்தைக் கொண்டாட ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு காதலர்களின் வருகை அதிகமாக இருக்கும். கேளிக்கை விடுதிகள், மசாஜ் நிலையம் என யூத்களின் சொர்க்கமாகவே தாய்லாந்தை மாற்றி, சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். பரிசுப்பொருட்களையும் அள்ளிக் கொடுப்பர். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விநோத பரிசை தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப்பொருளாக மாறியுள்ளளது. அதாவது காதலர் தினத்தையொட்டி 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
பாலியல் தொற்று பரவல் மற்றும் இளம் வயதில் கருவுறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரும்பிய அளவும் ஆணுறைகளை வாங்கி கொள்ளலாம் எனவும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இலவச ஆணுறைகள் கிடைக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தாய்லாந்தில் எய்ட்ஸ் போன்ற பாலியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 24.4% பேர் கருவுற்றதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல், பாலியல் ரீதியான நோய்களில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் 15 முதல் 19 வயது மற்றும் 20 முதல் 24 வயது உடையவர்களாக இருக்கின்றனர்.
இதனை தடுப்பதற்காகவும், பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்துவதற்காகவும், காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.