இசை ரசிகர்கள் அதிர்ச்சி! பம்பாய் சகோதரிகளில் இளையவரான லலிதா மரணம்!
![இசை ரசிகர்கள் அதிர்ச்சி! பம்பாய் சகோதரிகளில் இளையவரான லலிதா மரணம்!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/b9a139322a38ddcd26ade7265b6af4a5.webp?width=836&height=470&resizemode=4)
கேரள மாநிலம் திருச்சூரில் முக்தாம்பாள் மற்றும் சிதம்பரம் ஐயர் ஆகியோருக்கு மகள்களாக சி.லலிதா மற்றும் அவரது மூத்த சகோதரி சி.சரோஜா பிறந்தனர். ஆங்கிலப் பேராசிரியையாக ஆசைப்பட்ட லலிதாவுக்கு இசையில் ஆர்வம் இல்லை. சரோஜா, லலிதாவை சேர்ந்து பாடும்படி ஊக்குவித்தார். சிறு வயதில் இருந்தே இருவரும் சேர்ந்து பாடும் வழக்கத்தை தொடங்கினர்.
![இசை ரசிகர்கள் அதிர்ச்சி! பம்பாய் சகோதரிகளில் இளையவரான லலிதா மரணம்!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/d4c999055a8f77e8326556ccd53a0cb5.webp)
சகோதரிகள் இருவரும் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக்கல்வி பயின்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். பின்னர் அவர்கள் பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் தந்தையான புகழ்பெற்ற எச்.ஏ.எஸ்.மணியின் வழிகாட்டுதலின் கீழ் பாடத் தொடங்கினர். அதோடு முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றனர்.
பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் இருந்து இவர்கள் ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். பல மொழிகளில் பாடி அசத்தும் இந்த இசை இணையர்களுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, 2010-ல் சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிர் இழந்தார்.
மறைந்த லலிதாவின் கணவர், தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் . அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.லலிதா சந்திரனின் உடல் அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.