இனி ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் ..!!
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்பு தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக உருவானது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி நகரத்தை அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.அதன்பின்பு அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் கர்னூலை சட்ட தலைநகராகவும் ஏற்படுத்தப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தை தலைநகராக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் 3 தலைநகரம் என்ற திட்டத்தை அம்மாநில அரசு கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி,“எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்கு குடியேறுகிறேன்" என்று கூறினார்.