பெண் சீடரை கற்பழித்த வழக்கு.. சாமியார் ஆசாரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாரம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர். இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தில், சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண், சீடராக இருந்தார். அவர் ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை சாமியார் ஆசாரம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு அப்பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆசாரம் பாபு, அவருடைய மனைவி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது ஒருவர் இறந்து விட்டார். மீதி 7 பேர் மீதும், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி டி.கே.சோனி நேற்று தீர்ப்பு அளித்தார். சாமியார் ஆசாரம் பாபு மீதான கற்பழிப்பு, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி என்றும் அறிவித்தார்.
சாமியாரின் மனைவி உள்ளிட்ட 6 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். ஆசாரம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதன்படி, ஆசாரம் பாபுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது. ஆசாரம் பாபு, மற்றொரு கற்பழிப்பு வழக்கில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் இருக்கிறார்.